Saturday, June 28, 2008

வனமெல்லாம் சிம்மத்தின் வசம்


எங்களுக்கு நெருங்கிய குடும்ப நண்பர், ஒரு பெண்மணி. மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனைத்துறையில் வைஸ் பிரசிடெண்ட். மாதத்தில் பெரும்பாலான நாட்கள் வேலை விஷயமாக வெளியூர் பயணம் தான். அண்டை வீடே ஆனாலும் சந்தித்துக் கொள்வது வாரத்தில் ஓரிருமுறைதான்.

ஒருநாள் காலையில் அலுவலகம் கிளம்பும்வேளை, அவர் வாசலில் அறிமுகம் இல்லாத சிலரோடு மிகவும் காராசாரமான விவாதம் செய்வது கேட்டது. அருகே சென்று விவரம் கேட்டபோது அவர்கள் வீடு தேடி வந்து வசூல் செய்ய முற்படும் கிரடிட் கார்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புரிந்தது. வந்தவர்களின் நடத்தையும் பேச்சும் மிக தரக்குறைவாக இருந்தது.

பிரச்சனை என்னவென்றால் இரண்டு மாதங்களுக்கான தவணைக் கட்டப்படவில்லை என்பது தான்.

பாவம் அவர். தன்னுடைய அலுவலக உதவியாளரை நம்பி விட்டிருந்த வேலை, செய்யப்படாமல் விடுபட்டிருந்ததால் வந்த வினை.

இவர், 'முழு விவரமும் தெரிந்து கொண்டு பிறகு கட்டச் சொல்கிறேன்' என்றால் வந்தவர்கள் அதற்கு ஒப்புக் கொள்வதாக இல்லை.

“சீ ! ஏதோ ஒரு மாசம் விட்டுப் போச்சுனா இப்படிதான் ஆள அனுப்பிச்சு ஸீன் கிரியேட் பண்ணனுமா? கேக்குறதலையும் ஒரு டீஸென்ஸி வேண்டாம். கூண்டாவை வச்சு வசூல் பண்றாங்க. கார்டு வேண்டாம்னாலும் நூறு தடவை ஆபீசுக்கும் வீட்டுக்கும் வந்து கால்ல விழுந்து கெஞ்ச வேண்டியது. எப்பவோ ஒரு சின்ன தப்பு நடந்தா இப்படி அசிங்கப்படுத்தறது. முதல்ல இந்த கார்டை கேன்ஸல் பண்ணச் சொல்றேன்” என்று பொருமிக் கொண்டே சென்றார்.

இப்பொழுதெல்லாம் வங்கிகள் வெளியார் துணையோடு( out sourcing) தவணைகளை வசூலிக்கின்றனராம்.

அதனால் வந்த தரக்கேடு இது.

கடன் வாங்காத வரையில் ஒருவன் ராஜா. ஏதேனும் காரணத்தால் வண்டிக்காகவோ, வீட்டிற்காகவோ கடன் வாங்கி தவணை செலுத்துவதில் இடர் ஏற்பட்டால் கடன் கொடுத்தவரின் ஏச்சுகளை கேட்டு மனம் துன்பப்படுகிறது.

இந்த மாயையும் அப்படித்தான். முதலில் நம்மைச் சுற்றி ஒரு சுகமான உலகை சிருஷ்டிக்கிறது. மயக்கம் நீடிக்கிறது. தவறுகள் ஏற்படுகின்றது. பின்னர் திரை சிறிது சிறிதாக விலகி தன் கோர சொரூபத்தை காட்டுகிறது. ஏனிப்படி என்றால் ”எல்லாம் நீயே வரவழைத்துக் கொண்டது” என்று பதில் வருகிறது. என்ன விசித்திரம் இந்த உலகம்! எனவேதான் கவிஞனுக்கு கோபம் உண்டாகிறது. பாரதியின் சீற்றத்தைப் பாருங்கள்.

என்னைக் கெடுப்பதற்கு எண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!- நான்
உன்னைக் கெடுப்பது உறுதி என்றே
உணர் -மாயையே
................
நீ தரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே- சிங்கம்
நாய் தர கொள்ளுமோ
நல்லரசாட்சியை -மாயையே

ஞானிகளுக்கு இத்தகைய சஞ்சலங்கள் எதுவும் கிடையாது. அவர்கள் உலகை நாடக மேடையாகக் காண்பதால் சுகமும் துக்கமும் மாறி மாறி வந்து செல்லக் கூடிய காட்சிகள் என்பதை அறிவார்கள். அவர்களின் ஒரே குறிக்கோள் இறைவனின் சாட்சாத்காரம் ஒன்றுதான்.

ஒரு சிங்கத்தை தன்சொற்களால் பசப்பி புவனம் என்கிற பாழ் கிணற்றிலே தள்ளப் பார்க்கும் முயல் போல மாயையின் லீலையே மற்றவையெல்லாம் என்பதை அவர்கள் முற்றும் உணர்ந்தவர்கள். எனவே கபீர் நமக்கு பழக்கமான கதையை சொல்லியே இதை புரிய வைக்கப் பார்க்கிறார்.

अकिल बिहूना सिंह, ज्यौं गया ससा के संग ।
अपनी प्रतिमा देखि के, कियो तन के भंग ॥


அகில் பிஹூனா ஸிம்ஹ், ஜ்யோவ் கயா ஸஸா கே ஸங் |
அப்னீ ப்ரதிமா தேகி கே , கியோ தன் கே பங்க் ||


வனமெலாம் சிம்மத்தின் வசம், சென்றது செவியன் சொல்வசம்
மனம்மருளும் பிம்பத்தின் வசம், பின் இல்லை தேகம் அதன்வசம்

(செவியன்= முயல்)

எதற்கும் அஞ்சாத சிங்கத்திற்கும் மன மயக்கம் ஏற்பட்டு புத்தி தடுமாறுகிறது. அந்த தடுமாற்றத்திற்கு காரணம் பொய்யை உண்மையென நம்பியதே காரணம். உலகில் வாழ்க்கை நடத்தும் பொழுது நமக்கு பலவகையான தடுமாற்றங்கள். எது நல்லது, எது கெட்டது என்று புரியாத நிலை. இறைவனே யாவும் என்ற விவேகத்தை உறுதியாகப் பற்றி கொள்ளத் தெரியாத மடமை.

ஆகையால் சிங்கத்தை போல சுதந்திரமாக தலைநிமிர்ந்து நடைபோட வேண்டிய மனிதன் ஆடுகளைடையே வளர்ந்த சிங்கக்குட்டி போல மந்தையோடு நடை போடுகிறான். மே... மே என்று ஆடுகளைப் போலவே கையாலாகதவன் போல் கத்தித் திரிகிறான்.

அப்போது, சிங்கம் போன்று, தன்னை உணர்ந்த குரு வந்து “ நீ ஆடு அல்ல சிங்கம்” என்று நம்பிக்கை ஊட்டுகிறார். கர்ஜிக்க கற்றுக் கொடுக்கிறார். அப்படி ஒரு கர்ஜனையை இங்கே கேளுங்கள்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே யெந்நாளும் துன்பமில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன் நற்சங்க வெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே

(நடலை=பொய்மை; ஏமாப்பு = மகிழ்ந்திருத்தல்; மீளா ஆளாய்= எந்நாளும் அடிமையாய் ; கொய் மலர் = புதிதாக மலர்ந்த மலர்; குறுகினோமே=அடைந்தோமே)

சமணத்தைத் துறந்து சைவநெறியை தழுவிய நாவுக்கரசரை விசாரிக்கும் பொருட்டு அரசன் அழைப்பு அனுப்புகிறான். அழைப்பை ஏற்க மறுத்த அப்பர் பெருமான் கூறிய பாடல் இது.

அந்த தன்னம்பிகை எங்கிருந்து வந்தது? இறைவனே எல்லாம் என்ற மனத்தெளிவே காரணம். வேறொன்றையும் எதிர்பார்க்காத மனப்பக்குவம்.

அத்தகைய மனத்தெளிவு நமக்கும் வந்துவிட்டால் முயலிடம் அகப்பட்ட சிங்கம் போல் அவதிப்பட வேண்டியதில்லை. எதற்கும் அஞ்சாத சிங்கமாய் இவ்வுலகில் சுற்றி வரலாம்.

No comments yet

Posts