Thursday, January 24, 2008

நீ நீ என யாவும் நீயே


அசோக மன்னனை ஒரு போரின் அவலங்கள் மனம் மாறச் செய்தது என்றால் ஒரு சில நாட்களின் சிறைவாசம் அரவிந்தரை ஆன்மீகத்திற்கு திருப்பியது. தீவிரமான கருத்துகளோடு சுதந்திரப் போராட்டத்திலிருந்த அவரை திசை திருப்பிய நிகழ்சியைப் பற்றி அவரது சொற்களிலே காண்போம்.

நான் கைது செய்யப்பட்டு லால் பஜார் ஹஜத்-க்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்ட போது சிறிது காலம் கலங்கிவிட்டேன். அவன் திருவுள்ளத்தை புரிந்து கொள்ளும் நிலை எனக்கு இருக்கவில்லை. "எனக்கு ஏன் இப்படி நேர வேண்டும்” என்று என் இதயம் ஓலமிட்டது. இந்நாட்டிற்க்காகவும் இம்மக்களுக்காகவும் நான் மேற்கொண்டிருக்கும் இக்கடமை முடியும் வரை எனக்கு உன் பாதுகாப்பு உண்டென்று நினைத்தேனே.அப்படியிருக்க இப்பொழுது ஒரு குற்றசாட்டுடன் எதற்காக அடைக்கப்பட்டு இருக்கிறேன்” என்று என் உள்ளம் புலம்பியது.
நாட்கள் நகர்ந்தன ஒன்று, இரண்டு மூன்று என. அப்போது ஒரு குரல் கேட்டது.“பொறுத்திருந்து பார்”.
அதன்பின் மனம் சற்று அமைதி அடைந்து பொறுமையுடன் காத்திருந்தேன்.

லால் பஜாரிலிருந்து அலிபூர் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு தனிமையில் அடைக்கப்பட்டேன். ஒருமாத காலம் வெளி உலகத்துடன் எவ்வித தொடர்புமின்றி இருந்தேன். அங்கே இறைவனின் குரலுக்காக இரவும் பகலும் காத்திருந்தேன். அந்த தனிமையில் எனக்கு முதல் இறை அனுபவம் கிடைத்தது.


நான் கைது செய்யபடுவதற்கு சுமார் ஒரு மாதம் முன்பு எனக்கு அவனிடமிருந்து வந்த அழைப்பை புறக்கணித்த நினைவு வந்தது. " எல்லாவற்றையும் விட்டு வந்துவிடு. உன்னுள் என்னைத் தேடு” என்ற பலமான உள் உந்துதலை வலுக்கட்டாயமாகப் புறக்கணித்தேன். அதற்கு என் மன பலவீனமே காரணம் என்று நினைக்கிறேன். நான் கடமை என்று கருதிய பொறுப்புணர்வில் மனம் கண்டிருந்த பெருமையும் காதலுமே அதற்கு காரணம். நான் இல்லாவிட்டால் அவையெல்லாம் அப்படியே நின்று போகும் அல்லது அழிந்து போனாலும் போகும் என்று நினைத்தேன்.
இப்போது 'நீயாக வழிக்கு வரமாட்டாய் என்பது தெரிந்துதான் இந்த ஏற்பாடு' என்று சொல்வது போல் தோன்றியது. ‘உனக்கு நீயே ஏற்படுத்திக் கொண்ட தளைகளை அறுத்து எறிய சக்தியில்லாததால்தான் நானே அதை துண்டிக்க முடிவு செய்து விட்டேன். நீ அதிலே தொடர்வது என் சங்கல்பத்தில் இல்லை. உனக்கு வேறுவிதமான கடமைகள் உள்ளன. அதற்காக உன்னை தயார் செய்யவே இங்கே வரவழைத்துள்ளேன்' என்று சொல்வதாக உணர்ந்தேன்.

அப்பொழுது பகவத்கீதையின் பிரதியொன்று எனக்கு கிடைத்தது. அதன் வலிமை முழுவதுமாக என்னுள் சேர்ந்தது. பற்றற்று செயல்புரியவும், இறைவனின் கையில் ஒரு கருவியாக இருப்பதன் உண்மையும்,வெற்றி-தோல்வி, நண்பன்-எதிரி, மேலோன் -கீழோன் என்ற வித்தியாசங்கள் எல்லாம் பொய்மை என்பதையும் பூரணமாக புரிந்து கொண்டேன். என் மனதிலிருந்து எல்லா வேற்றுமைகளும் மறையத் தொடங்கியது. என் பார்வையில் மாற்றங்கள் ஏற்பட்டது.

என்னையும் பிறரையும் பிரிக்கும் அந்த சிறைச்சாலையின் பெரும் சுவர், சுவர் என்ற எண்ணத்தை உண்டாக்கவில்லை. என் வாசுதேவனே என்னை சுற்றி நிற்பது போல் தோன்றியது. என் அறைக்கு எதிரே நின்ற அந்த மரம் கிருஷ்ணனாகவே காட்சியளித்தது. வெளியிலே காவல் காத்து நின்றவரைப் காணும் போது என் நாராயணனே என்னை காவல் புரிவதாகத் தோன்றியது. எனக்கு கொடுக்கப்பட்டிருந்த முரமுரப்பான போர்வையை போர்த்துக் கொள்ளும் பொழுது கிருஷ்ணனே தன் கையால் என்னை அரவணைத்திருப்பது போல உணர்ந்தேன். அங்கிருந்த சக கைதிகளைப் பார்த்தபோதும் எல்லோரும் வாசுதேவனாகவே காட்சியளித்தனர். அவர்களில் திருடர்களும், கொலை கொள்ளை பாதகம் புரிந்தவர்களும் அடக்கம். ஆனால் அவை எதுவும் என்னுள் வேற்றுமையை தோற்றுவிக்கவில்லை. இந்த அனுபூதி பலநாட்கள் தொடர்ந்தது.

என் வழக்கும் ஒரு நாள் விசாரணைக்கு வந்தது.நான் மன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பொழுது அவனுடைய குரல் மீண்டும் கேட்டது. “என்னை ஏன் பாதுகாக்கத் தவறினாய் என்று புலம்பினாய் அல்லவா? இப்பொழுது உன்னை குற்றம் சாட்டும் வழக்குரைஞரையும் நீதிபதியையும் பார்”.

அங்கே நீதிபதி அமர்ந்திருக்கவில்லை. அங்கே அமர்ந்திருந்தது என் வாசுதேவன். வழக்குரைஞர் பக்கம் பார்த்தேன். என் பிரிய நண்பன் கிருஷ்ணனல்லவோ என்னைப் பார்த்து புன்னகைத்தான்.

"என்ன இன்னுமா பயம்?” என்று அவன் கேட்டான். “எல்லோருள்ளும் இருப்பவன் நானே. அவர்களது செயலையும் சொற்களையும் நானே முடிவு செய்கிறேன்.உன்னைக் காக்கும் பொறுப்பை என்னிடம் விட்டு விடு. இந்த வழக்கின் போக்கை என்னிடம் விடு. உன்னை இங்கு வரவழைத்தது என்னுடைய பிற வேலைக்காக. இந்த வழக்கு வெறும் ஒரு மேற்போக்கான காரணம் தான்”.


(பாரதீய வித்யாபவன் பிரசுரித்த How God came in to my Life (4th edition 1990) என்ற புத்தகத்திலிருந்து)

அந்த அனுபவத்திற்கு பிறகு சாட்சி பாவத்துடன் அரவிந்தர் வழக்கை ஒரு வேடிக்கை போல காணத் துவங்கினார். வங்காளத்தின் மிகப்பெரும் வழக்கறிஞரான சித்தரஞ்சன் தாஸ் ஒரு கட்டத்தில் தாமாகவே முன்வந்து அரவிந்தரின் விடுதலைக்காக போராடி வெற்றி கண்டார். அதன் பின் பாண்டிச்சேரிக்கு சென்று அவர் தமது ஆன்மீக சாதனைகளைத் தொடர்ந்தது வரலாறு.

அரவிந்த கோஷ் அவர்களின் இந்த அனுபவம் எல்லா ஞானிகளுக்கும் உரியது என்பதை கபீர் அவர்களின் வார்த்தைகளிலும் காணலாம்.

तूतू करता तू भया, मुझमें रही न हूंय ।
बारी तेरे नाम पर, जित देखूं तित तूंय ॥

தூ தூ கர்தா தூ பயா, முஜ்மே ரஹீ ந ஹூய்
பாரி தேரே நாம் பர், ஜித் தேகூம் தித் தூய்


துறந்தே(ன்) என்னை உன் நினைவில் நீ நீ யென யாவும் நீயே
திறந்தே வழிதரும் உன் நாமம், எதைக் காணினும் அதில் நீயே

'நாக்கு தழும்பேறும் வரை செபி, மந்திரம் சித்தியாகும்' என்பார் வாரியார் சுவாமிகள். மந்திரம் சித்தியானது என்பதற்கு அடையாளந்தான் அரவிந்தரின் அனுபவம்.

நாம செபம் என்பது எறும்பு ஊர்தல் போல இருக்க வேண்டுமாம். எப்படி தன் வழியில் வரும் சுவர், தூண், பள்ளம்,மேடு எல்லாவற்றையும் தாண்டி தன் காரியமே கண்ணாக சென்று கொண்டிருக்குமோ அது போல நாம செபத்தில் ஈடுபட்ட மனம் அமைதியாக காமம்,குரோதம்,ஆணவம் போன்ற தடைகளை தாண்டி இறைவனை சேரும் வலிமை பெறுகிறது. இதை பிப்பலிகா மார்கம் என்பர். பிப்பலிக்கா என்றால் எறும்பு.

நாமசெபம் செய்ய காலம் இடம் போன்றவை தடையில்லை. மனம் மட்டும் ஒத்துழைக்க வேண்டும். எந்த விஷயத்தில் மனம் ஈடுபாடு கொள்ளுமோ அப்போது அதன் ஒத்துழைப்பு முழுவதுமாக இருக்கும். ஈடுபாடு கொள்ள வேண்டுமானால் பொதுவாக எதைக் கண்டு ஆச்சரியப்படுமோ அப்போது அதில் ஈடுபாடு வரும். ஆச்சரியப் படுவதற்கு கடவுளின் படைப்பில் பஞ்சமா என்ன?

அமரகவி, ‘காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே, நீ கனியிலே இனிப்பதென்ன கண்ண பெருமானே' என்று எல்லாவற்றிலும் அவன் ஊடுருவி நிற்கும் பெருமையை வியக்கிறார்.

'பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா, நின்றன் பச்சை நிறந் தோன்றுதையே நந்தலாலா' என்று அரவிந்தர் கண்ட உண்மையையும் பறைசாற்றுகிறார். அவருடைய தாசனோ 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று பாரதியின் சக்தி போற்றுதலை எதிரொலிக்கிறார். கபீரும் சக்தியின் பெருமையை இன்னும் ஒரு படி மேலே போய் பச்சை வர்ணத்தில் மறைந்திருக்கும் செந்நிற வர்ணமாக அவளைக் காண்கிறார்.

साहिब तेरी साहिबी, सब घट रही समाय ।
ज्यों मेहंदी के पात में, लाली लखी न जाय ॥

சாஹிப் தேரீ ஸாஹிபி, ஸப் கட் ரஹி ஸமாய்
ஜ்யோம் மெஹந்தீ கே பாத் மேம், லாலீ லகீ ந ஜாய்


பெருமாளே, இல்லந் தோறும் இலங்குவாள் உந்தன் இறைவி
மருதாணி இலையுளும் மருவினாள், மங்காத செந்நிறச் செல்வி
( இறைவி = தலைவி ; மருவுதல் = கலந்திருத்தல் )

நன்கு அரைக்கப்பட்டு கையிலே பூசி கழுவிய பின்னும் பலநாட்களுக்கு மங்காமல் இருக்கும் மருதாணி செந்நிறத்தின் மர்மம் என்ன ? அதிலே மறைந்து இருப்பதும் அவனுடைய சக்தியே அன்றோ ! உயிர்வேதியியல் படித்தவர்கள் இன்று இதற்கு பலவிதமான விளக்கங்கள் அளிக்கலாம். ஆனால் அவையெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் போலத்தான்.

அவளுடைய தத்துவத்தை அறிந்தவர்கள் சிவனும் மாலும் மட்டும் தானாம், வியந்து அவளைப் போற்றுகிறார் அபிராம பட்டர்.

ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ்வுலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள் - என்றன் நெஞ்சினுள்ளே

பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்
அன்று ஆலிலையில்
துயின்ற பெம்மானும், என் ஐயனுமே (அபிராமி அந்தாதி-56)

இயற்கையின் அற்புதங்களை மேலும் மேலும் கண்டு மனம் வியக்கக் கற்றுக் கொள்ளுமானால் அது தானாகவே கடவுளின் பால் நாட்டம் கொள்ளும். அதன் பின்னர் அதன் முழு ஒத்துழைப்பும் நாம செபத்திற்கு கிடைக்கும். அரவிந்தரை போல சாட்சி பாவத்தில் 'எல்லாம் அவன் செயல்’ என்று மனதை வைத்துக் கொண்டால் சிருஷ்டியின் மேன்மையை போற்ற நேரம் கிடைக்கும். அதிலேயே மனம் லயக்கும் போது எல்லாம் அவனாகவே தெரிகிறது கவிஞனுக்கும் ஞானிக்கும்.

பள்ளியில் பயின்ற ஒரு பிரார்த்தனை:

சூரியன் வருவது யாராலே, சந்திரன் திரிவதும் எவராலே
காரிருள் வானில் மின்மினி போல் கண்ணில் தெரிவன அவையென்ன
பேரிடி மின்னல் எதனாலே பெருமழை பெய்வதும் எவராலே
யாரிதற்கெல்லாம் அதிகாரி அதை நாம் எண்ணிட வேண்டாமோ.

இதை எழுதியது நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்று நினைவு. தவறானால் சுட்டிக்காட்டவும். திருத்திவிடலாம்.

No comments yet

Posts