Thursday, May 22, 2008

அன்னை எத்தனை அன்னையோ !


ஆசுகவி காளமேகம் பற்றிய பாடம் துணைப் பாட நூலில் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்தது. கூடவே தமிழ் முக்கிய பாடத்தில் இருந்த அவரது சிலேடை கவிதைகள் அவர் மேல் ஒரு பிடிப்பை ஏற்படுத்தின. பல வருடங்களுக்குப் பின் இராமகிருஷ்ண விஜயத்தில் படித்த அவரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி. இது பலரும் அறிந்திருக்கக் கூடிய கதைதான்.



கவி காளமேகம் வைஷ்ணவத்திலிருந்து சைவத்திற்கு தன் பக்தியை மாற்றிக்கொண்டவர். ஒருநாள், பெருமழையில் வழியில்லாமல் திருக்கண்ணபுரக் கோவிலில் ஒதுங்க முற்பட்டார். அங்கிருந்த வைஷ்ணவர்கள் அவரிடம் ''கண்ணபுரத்தானை உயர்த்திப் பாடுவதானால் உமக்கு இடமுண்டு '' என்று வழி மறித்தனர்.'ஆஹா அதற்கென்ன' என்றவர் “கன்னபுரம் மாலே கடவுளிலும் நீ அதிகம்'' என்று முதல் அடியை சொல்லி உள்ளே புகுவதற்கு வழி செய்து கொண்டார். மழை விட்டதும் கிளம்பும் போது தன் குறும்பைக் காட்டினார்.



கன்னபுரம் மாலே கடவுளிலும் நீ அதிகம்

உன்னிலும் யான் அதிகம்; ஒன்றுகேள்-முன்னமே


உன் பிறப்பு பத்தாம் உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை.


என் பிறப்பு எண்ணத் தொலையாதே !




இப்பாடலைத் தொடர்ந்து இன்னும் ஒரு பாடல் இருந்தது. அதில் “நான் எண்ணிறந்த பிறவிகளில் குடித்திருக்கும் தாய்ப்பால் உன் பாற்கடலினும் பெரிது“ என்பதாக பொருள் வரும். அப்பாடல் மதுரை தமிழ் திட்ட தொகுப்பில் காணக் கிடைக்கவில்லை இந்த இரண்டாம் பாடல் பற்றிய விவரம் தெரிந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.



எப்படியோ! காளமேகம் நம்மையும் கூட பெருமாளை விட பெரிய ஆளாக்கி விட்டார். ஏனெனில் நாம் கூட காளமேகத்திற்கு நம் பிறப்புகளின் எண்ணிக்கையில் சளைத்திருக்க மாட்டோம். ஹூம் ! எப்படியெல்லாம் பெருமை கொள்ள முடிகிறது மனிதனால் !!



வெறும் எண்ணிக்கையில் பெருமை கொள்ளும் விஷயமா இது ? இன்பம் தரும் விஷயமாக இருந்தால் பெருமை கொள்ளலாம். பிறவி என்பதே துன்பமயமானது என்னும் போது ‘பிறவிப் பெருங்கடலை நீந்தும்' வகையறியாது காலம் கழிப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்.



அதனால் கபீர் போன்ற ஞானிகளுக்கு உலகமக்கள் பிறப்பை கொண்டாட்டத்திற்கான காரணமாக கொள்ளும் போது வருத்தம் மேலிடுகிறது.



बेटा जाये क्या हुआ, कहा बजावै थाल ।

आवन जावन होय रहा, ज्यों कीडी़ के नाल ॥


பேடா ஜாயே க்யா ஹுவா, கஹா பஜாவை தால் |

ஆவன் ஜாவன் ஹோயி ரஹா, ஜ்யோன் கீடீங் கே நால் ||




பிறந்தான் குமரன் என்று, குமண்டை குணலி எதற்கு

பிறந்து மடிவன கீடம், நெளியும் சலதியில் பாரங்கு




(குமண்டை=செருக்கிய செயல், குணலி=ஆரவாரக் கூத்து, கீடம்= புழுக்கள், சலதி=சாக்கடை)



சாக்கடையில் பிறக்கின்ற புழுவும் கூட உண்டு, உறங்கி(?) இனப்பெருக்கம் செய்து பின் மடிகிறது. அதை விட எந்த வகையில் நம்முடைய இந்த பிறவி உயர்ந்ததாகிறது ?



..............................................

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்


வல்லசுரராகி முனிவராய் தேவராய்ச்


சொல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள்


எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்


மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்....
(சி்வபுராணம்)



என்று மாணிக்க வாசகர் இறைவன் படைப்பின் தன்மை குறித்தும் மனிதனின் குறிக்கோள் குறித்தும் ஒருங்கே சொல்லிவிடுகிறார்.



சங்கரரைப் போல பிறவியிலேயே ஞானியாக இருக்க முடியாதுதான். அட ராமானுஜரைப் போலவோ, இராகவேந்திரரைப் போலவோ இல்லறத்தில் இருந்து பின் குரு சேவையால் உயர்ந்து வழிகாட்டிகளாக முடியாவிட்டாலும் பரவாயில்லை. நந்தனார் போலவோ ஆண்டாள் போலவோ பக்தி செய்ய இயலாவிட்டாலும் போகட்டும். வயதுக்கேற்ற முதிர்ச்சியே இல்லாமல் 'மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காத பிறவி' களைப்பற்றி என்ன சொல்வது ?



கண்களில் திரைப் பூத்து பார்வை மங்கிவிட்டது. செவிகளின் கேட்கும் திறன் குன்றி விட்டது. தலையில் வெள்ளிக்கம்பிகள் போல நரைமயிர் ஒளிர்கின்றது. ஆயினும் மன்னன் யயாதி போல உலக சுகங்களை தொடர்ந்து அனுபவிக்கும் ஆசை விடுவதில்லை. அப்படிப் பட்டவர்களை கண்டு கபீருக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது.



आंखि न देखे बावरा, शब्द सुनै नहि कान ।

सिर के केस ऊजल भये, अबहूं निपट अजान ॥




ஆன்கி ந தேகே பாவ்ரா, ஷப்த் சுனை நஹி கான் |

ஸிர் கே கேஸ் ஊஜல் பையா, அப்ஹூ நிபட் அஜான் ||




கண்ணிலே ஒளியும் மங்குது, செவியிலே ஒலியும் மெலியுது

தலையிலே நரையும் ஒளிருது, கடையிலே பேதமை நிற்குது


(கடையிலே= மரணகாலத்தில், பேதமை=அஞ்ஞானம்)



மாற்று :

ஒளியிழந் தனவே கண்கள், செயலிழந் தனவே செவிகள்

வெளியே றும்வழி தேடார்,பின்னும், வெளிற்முடி வெளியாரே




(வெளியேறும் வழி= முத்திக்கான வழி; தேடார் = தேட மாட்டார்கள்; வெளிறு=வெண்மை; வெளியார்= அறிவற்றவர்கள் )



ஒரு புகழ் பெற்ற பெண், ஆங்கில, உபன்யாசகர் சொன்ன ஒரு நிகழ்ச்சி. அவரது அமெரிக்க சொற்பொழிவுகளுக்கு ஏகக் கூட்டம். பாதிக்கு மேல் தமிழ் பேசுபவர்கள். ஒரு முறை நிகழ்ச்சி துவங்க இன்னும் அவகாசம் இருந்தது. பார்வையாளர் இருக்கையில் ஏதொவொரு பின் வரிசையில் சொற்பொழிவாளர் அமர்ந்திருக்கிறார். அவர் முன் அமர்ந்திருந்திருந்த இரு தமிழ் மூதாட்டிகள் ஏதேதோ பேசிக் கொள்வது இவர் காதில் விழுகிறது. அப்போது ஜீன்ஸ் பாண்ட் அணிந்த ஒரு இளம் பெண் இவர்களை தாண்டிச் சென்றாள். பேச்சை பாதியிலே நிறுத்தி, அவள் போன திசையை பார்த்தபடியே ஒரு மூதாட்டி சொன்னது



“அடுத்த ஜென்மத்திலாவது அமெரிக்கால பொறந்து ஜீன்ஸு, ரேபான் க்லாஸ் மாட்டிகிட்டு சுத்தணும்”.



!!!!!!!



ஓரிரு முறை, மகளுக்காகவோ, மருமகளுக்காவோ வெளிநாடு சென்று வந்த பல வயதில் முதிர்ந்த பெண்மணிகள் ஊர் திரும்பிய பின் காலை நேரங்களில், அது வரை நாம் அவரணிந்து கண்டிராத, பாண்ட்-டும் ரெபோக் ஷூவுமாக வாக்கிங் செல்லும் மாற்றத்தை பலர் கண்கூடாக கண்டிருக்கிறோம். “ ரொம்ப கம்ஃபர்டபலா இருக்கு” என்பது சொல்லப்படும் ஒரு காரணம். ஆனால் உள்ளுக்குள் தாம் இளமையாக காட்சியளிக்க வேண்டும் என்ற ஆதங்கம். உண்மையில் இவையெல்லாம் தேகாபிமானத்தால் எழக்கூடிய ஆசைகளே.



இவைகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடும் பொழுது நாம் வெளிப்படுத்திக் கொள்வது நம் மன முதிர்ச்சி இன்மையையே.



கழிந்துபோன இளமை, ஆனால் முடிவில்லாத புதுப் புது ஆசைகள். பிறப்பென்னும் பிணியை தொடர வைக்கும் சங்கிலி. நம்முடைய இந்த நிலை கண்டு பெரியவர்கள் வேறென்ன செய்ய முடியும் ? கபீர் போலவும் பட்டினத்தார் போலவும் ஒரு பாட்டை பாடி வைத்துவிட்டு போகத்தான் முடியும்.



அன்னை எத்தனை எத்தனை அன்னையோ

அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ


பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ


பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ

முன்னை எத்தனை எத்தனை சென்மமோ

மூடனாய் அடியேனும் அறிந்திலேன்


இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ


என் செய்வேன் கச்சி ஏகம்பநாதனே.
(திரு ஏகம்பமாலை)





அருகில் காணப்படும் ஓவியம் இறுதி தீர்ப்பு நாள் பற்றிய ஓர் ஓவியம். அதைக் கண்டபோது கபீர் சொன்ன ”சலதியில் நெளியும் புழுக்கள்” நினைவுக்கு வந்தது. ஓவியர் கிட்டோ,(Gitto) 16 ஆம் நூற்றாண்டு.

No comments yet

Posts